சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 4 (TNPSC - Group 4) 2018-2019 மற்றும் 2019-2020 அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விண்ணப்பங்களை பெற்றது.
இப்பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 2019 நவம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
TNPSC அறிவிப்பு
இத்தேர்வில் தகுதிப்பெற்றவர்களுக்கான இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு 25.11.2021 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்வு (Counselling) நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் கலந்தாய்விற்கு (Counselling) அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் (Rank), ஒட்டுமொத்த தரவரிசை எண் (Overall Rank), இடஒதுக்கீட்டு விதிகள் (Rule of reservation) மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.