சென்னை:கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வேளாண் துறை சார்பில், காண்டாமிருக வண்டுகளை ஒழிக்க, தென்னை விவசாயிகளுக்கு, மானிய விலையில், 'ரைனோலூர்' என்ற இனக்கவர்ச்சிப் பொறி வழங்கப்படுகிறது. ஒரு மூடப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட் போன்ற உபகரணம் மற்றும் இரண்டு பாக்கெட்டுகள் மருந்துடன் இந்த இனக்கவர்ச்சி பொறி வழங்கப்படுகிறது.
வேளாண் துறை இந்த பொறியை,'கிரீனிகான் அக்ரோடெக்' என்ற சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,400 அடக்க விலை மற்றும் ஜிஎஸ்டி ரூ.252-ஐ சேர்த்து, ஒரு பொறியை ரூ.1,652-க்கு கொள்முதல் செய்கிறது. அடக்க விலையான, ரூ.1,400ல் இருந்து 50 சதவீத மானியமாக, ரூ.700 மற்றும் ஜி.எஸ்.டி., ரூ.252-ஐ சேர்த்து, விவசாயிகளுக்கு ரூ.952-க்கு வேளாண்துறை விற்பனை செய்கிறது.
ஆனால், இந்த இனக்கவர்ச்சிப் பொறி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல தனியார் கடைகளில் ரூ.360 முதல் ரூ.450 வரை கிடைக்கிறது. ஆனால் வேளாண் துறை, இந்த பொறியை, மூன்று, நான்கு மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்கிறது. தனியார் உரக் கடைகளில் கிடைக்கும் விலையை விட, இரு மடங்கு அதிக விலைக்கு விவசாயிகளுக்கு விற்கிறது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.