சென்னைகிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் 217ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தீரன் சின்னமலை படத்திற்கு அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "17ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களை எதிர்த்துப்போராடியவர் தீரன் சின்னமலை. பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவை குறைத்து திமுக-வினர் ஆதாயம் தேடுகின்றனர்.
தினமும் 33 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 5.5 லட்சம் லிட்டர் பாலை தினமும் நாசர் என்ற பூனை குடித்துவிட்டது. இதன் மூலம் 2.4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு, ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் பாலில் இருந்து ஆதாயம் தேடி வருகிறார், நாசர்.
இதுகுறித்து விசாரணை நடைபெறும் என அமைச்சர் நாசர் தெரிவிக்கிறார். இதன் மூலம், துறை ரீதியான விசாரணையில் நியாயம் கிடைக்காது. மக்களுக்கு வழங்கும் பாலில் முறைகேட்டில் ஈடுபடும் அரசு தான், திமுக. விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் திமுகவின் பாரம்பரிய ஊழலில் நாசரும் தொடர்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவைப்போற்றும் வகையில் கடலில் பேனா சின்னம் வைப்பதன் மூலம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். சென்னையின் அடையாளமாக மீனவக்கிராமங்கள் உள்ளன. அதனை மறைக்க பேனா சின்னம் அமைக்கப்படுகிறது. இதனால் மீனவர்களின் அடையாளத்தை மறைக்கக்கூடாது.
இந்த சின்னத்தை அமைக்க திமுகவின் அறக்கட்டளையில் பணம் உள்ளது. அதில் செலவு செய்யட்டும். சீமான் தனது ஆவேசத்தை இதில் காட்ட வேண்டும். அதிமுகவிடம் காட்ட வேண்டாம். இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தேர்தல் ஆணைய ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
'கோவை செல்வராஜை யாரென்று தெரியாது': அதனடிப்படையில் நாங்கள் பங்கேற்றோம். ஆனால், கோவை செல்வராஜ் கூட்டத்தில் ஏன் பங்கேற்றார்... அவர் எந்தக் கட்சி, சுயேச்சையா என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தில் முறையாக இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தது குறித்து பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் சசிகலாவின் சந்திப்பிற்குப்பிறகு,எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் வைத்தது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். கனல் கண்ணன் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று மேடையில் கருத்தைப்பதிவு செய்துள்ளார்.
சபரீசன் பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து யாகம் வளர்த்தது ஏன்?:அதிமுக அரசாக இருந்திருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், பெரியார் வழி, அண்ணா வழி என்று சொல்லும் திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல, திமுக எப்போதும் சந்தர்ப்பவாத கட்சியாகத் தான் உள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திரா காந்தியை நேருவின் மகளே வருக, இந்தியாவின் திருமகளே வருக என வரவேற்றனர். பின்னர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தனர். அதுபோல, பாஜகவை எதிர்க்கின்றனர். ஆனால், பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூரில் யாகம் வளர்த்தது சந்தர்ப்பவாத அரசியலை வெளிக்காட்டுகிறது" என விமர்சித்தார்.
இதையும் படிங்க:'விவசாயத்தை அழித்து விமானநிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம்'