சென்னை: 2016 , 2017 , 2018 ஆகிய ஆண்டுகளில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக எஸ் பி வேலுமணி ரூ.400 கோடி ஊழல் செய்துள்ளார் என அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ரூ.400 கோடி ஊழல்:இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ”முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார் குற்றச்சாட்டுகள் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் சென்னை பெருநகர மாநகராட்சியில் விதிகளை மீறி பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக ரூ.400 கோடி டெண்டர் போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளது.
மேலும், கருப்பு பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெள்ளை பணமாக்கி மீண்டும் கறுப்பு பணமாக்கப்பட்டு உள்ளது. 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ள இந்த டெண்டர் முறைகேட்டு ஊழலில் துணைபோன தொடர்புடைய அரசு அலுவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்த ஆதரங்களை தற்போது திரட்டி உள்ளோம், மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புகார் தெரிவிக்க உள்ளோம். பேருந்து நிறுத்தம் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தி காஷ்மீர் ஃபைல்ஸ்; கெஜ்ரிவால் கேள்விக்கு பதிலளிக்குமா பாஜக?