சென்னை: சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.