தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு - Corporation tender case against SB Velumani

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான, மாநாகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என கூறி வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

எஸ்.பி வேலுமணிக்கு எதிரான மாநாகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு
எஸ்.பி வேலுமணிக்கு எதிரான மாநாகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு

By

Published : Jun 21, 2021, 4:17 PM IST

சென்னை: சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், சென்னை, கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், வழக்கில் நிறைய ஆதாரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் வழக்கை நேரடி விசாரணையாக மேற்கொள்ளவேண்டும். தற்போது ஆட்சி மாறி உள்ளதால் சூழலும் மாறிவிட்டது, எனவே வழக்கு விசாரணை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே அரசு சிறப்பு அலுவலரை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், இந்த விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டாலும், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றனர். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details