சென்னை:கோயம்புத்தூர் மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை முன்னாள்அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது புகார் எழுந்தது. இதையடுத்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
புகாரில் முகாந்திரம் உள்ளதா?
இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 220 டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிந்துள்ளது.
அதில் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று அப்போதைய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரிக்க வேண்டும்
இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. ஆனால் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.