சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர விற்பனைக் குழு அமைக்க தெருவோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒரு மண்டலத்துக்கு 6 நபர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் இருந்தது.ஆனால் தற்போது உயர்நீதிமன்ற ஆணைப்படி மொத்தம் 15 மண்டலருக்கும் சேர்த்து 6 நபர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் 16 பெண்கள் உள்பட 53 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 11 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள், 5 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர், 11 பேர் சிறுபான்மை இனத்தவர், 6 பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 12 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்.
15 மண்டலங்களில் இந்த தேர்தல் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஒருவருக்கு 6 வாக்குச் சீட்டு அளிப்பார்கள். அவர்கள் அந்த 6 வாக்குச் சீட்டிலும் வாக்களித்து வாக்கு பெட்டியில் போடுவார்கள்.
இந்த தேர்தலில் மாநகராட்சி கணக்குப்படி மொத்தம் 38,588 நபர்கள் வாக்கு செலுத்த தகுதியானவர்களாக இருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் நபர்களுக்கு வாக்களிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்படாதவர்களுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஐந்து அடையாள அட்டைகளை எடுத்து வந்து வாக்கு செலுத்தலாம்.