சென்னை மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்ததாக மேம்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக மெரினா கடற்கரையில் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனை இன்று (நவ.6) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் துறை உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், "மெரினா கடற்கரை பகுதியையும், லூப் சாலை பகுதியையும் ஒழுங்குபடுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசும், உயர் நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.
டிஜிபி அலுவலக சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியால் லூப் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பிரச்னை இல்லாமல் உள்ளது. தற்போது இந்த சாலையில் இருபுறங்களிலும் மீனவர்கள் மீன்களை விற்பனை செய்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது.