சென்னை: கடந்த வாரத்தில் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மிகவும் பாதிக்கபட்டதால் மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாயினர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளபட்ட நிலையில், சென்னை மாநகராட்சி முழுவதும் குப்பை அகற்று பணிகள் தற்பொது நடைபெற்று வருகிறது. இதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்னன் கூறுகையில், “பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வடிந்த பிறகு, மாநகராட்சிக்கு சவலாக இருந்து வரும் குப்பை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி சரசாரியாக 5 ஆயிரம் 780 மெட்ரிக் டன் அளவு குப்பையை சேகரிக்கும். 89 இலட்சம் நபர்கள் உள்ள சென்னையில் ஒரு நபர் 700 கிராம் குப்பைகளை போடுவார்.
ஆனால் தற்போது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை, குப்பையின் அளவு அதிகரித்துள்ளது. 6 ஆம் தேதி அன்று 5 ஆயிரத்து 915 மெட்ரிக் டன் குப்பைகளும், 7 ஆம் தேதி 6 ஆயிரத்து 465 மெட்ரிக் டன் குப்பைகளும், 8 ஆம் தேதி அன்று 7 ஆயிரத்து 705 மெட்ரிக் டன் குப்பைகளும், 9 ஆம் தேதி அன்று 8 ஆயிரத்து 476 மெட்ரிக் டன் குப்பைகளும், 10 ஆம் தேதி அன்று 8 ஆயிரத்து 948 குப்பைகளும் என மொத்தம் 37 ஆயிரத்து 511 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 16 ஆயிரம் பணியாளர்களும், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் இப்பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மரம், செடி போன்ற கழிவுகள் 4 ஆயிரத்து 680 மெட்ரிக் டன் குப்பைகளும், சோஃபா செட், சேர், மெத்தை போன்ற கழிவுகள் 32 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 4 ஆயிரத்து 834 பேட்டரி வாகனங்கள், 135 காம்பெக்கட்டர் வாகனங்கள், 220 பெருநகர சென்னை மாநகராட்சி வாகனங்கள் மற்றும் மற்ற துறை சார்ந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தொடர்ந்து போர்கால அடிப்படையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை" - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா..!