சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ், வருவாய்துறை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஏப். 9) ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சென்னையில் பிப்ரவரி மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 120 பேர் என்றளவில் குறைந்தது. மார்ச் முதல் அதிகரித்துள்ளது. முக்கியமாக கடந்த 45 நாள்களில் அதிகரித்துள்ளன. அன்றாட பாதிப்பு 1,500 வரை ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 10 மடங்கு அளவிற்கு கரோனா அதிகரித்துள்ளது.
களப்பணியில் நியமனம் செய்யப்படுவர்கள் மீண்டும் வீடுதோறும் காய்ச்சல், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு போன்ற பரிசோதனை மேற்கோள்ளப்படும். இதன் மூலம் 99 விழுக்காடு அளவிற்கு உயிரிழப்பை குறைக்க முடியும். இப்பணிக்காக 200 வீட்டுக்கு ஒருவர் என 6,000 பேரை தொடக்கத்தில் பயன்படுத்த உள்ளோம்.
சென்னையில் 1 லட்சத்து 15 ஆயிரம் காய்ச்சல் முகாம் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.
அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தேர்தல் காலத்தில் எண்ணிக்கை குறைந்தது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குதான் தொற்றின் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா பாதிக்கப்பட்டாலும், மிதமான பாதிப்புதான் ஏற்படுகிறது.