இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்குள்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள், இதர கடைகள் ஆகியவற்றில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல், அவ்வப்போது கைக்கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதை கடை உரிமையாளர்கள் கண்காணித்து உறுதிசெய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் கடைகளின் வாயிலில் டெட்டால், சானிடைசர் போன்ற திரவங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 50 வயதுக்குள்பட்ட இணை நோய்கள் உள்ள பணியாளர்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.