தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சட்டங்கள் நாய்களுக்கு சாதகமாக உள்ளது.. ஒரே வழி கருத்தடை தான்" - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்! - Chennai corporation Commissioner

சென்னையில் தெரு நாய்க்களின் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போது உள்ள விலங்கு பாதுகாப்பு சட்டம், நாய்களுக்கு சாதகமாக இருப்பதால் நாய்களை கட்டுபடுத்த கருத்தடை தான் ஒரே வழி என்று தெரிவித்தார்.

சென்னையில் 7 நபர்களை கடித்த நாய்
சென்னையில் 7 நபர்களை கடித்த நாய்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:32 PM IST

சென்னையில் 7 நபர்களை கடித்த நாய்

சென்னை: வியாசர்பாடி, எம்.கே.பி. நகரில் 7 நபர்களை தெரு நாய் ஒன்று கடித்ததையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரவோடு இரவாக அந்த நாயானது அதனுடைய குட்டிகளுடன் பிடிக்கப்பட்டு, புளியந்தோப்பு நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட நாய்கள் புளியந்தோப்பு நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், முதற்கட்ட ஆய்வின் மூலம், அந்த நாய்க்கு வெறிக்கான அறிகுறி ஏதுவும் இல்லை என்றும், நாயின் குட்டிகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதற்காக கடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நாய் 10 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு சாதகமாக அமையும் சட்டம்: இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தற்போது உள்ள சட்டங்களில், தெருநாய்களை காக்கும் சட்டம் நாய்களுக்கு சாதகமாக இருப்பதால், அவைகளுக்கு கருத்தடை தான் ஒரே வழி. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக நாய்களின் பிரச்சினை அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.

தெரு நாய் ஒன்று 7 நபர்களை கடித்துள்ளது. உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், இரவோடு இரவாக அந்த நாயானது அதனுடைய குட்டிகளுடன் பிடிக்கப்பட்டு புளியந்தோப்பு நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலரும், மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கைகளை கூடுதலாக செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தற்போது உள்ள சட்டங்கள், தெரு நாய்களுக்கு விலங்கு பாதுகாப்பு சட்டத்திலும், விலங்கு இனக்கட்டுபாடு சட்டங்கள் எல்லாமே நாய்களை பாதுகாக்க இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, மீண்டும் அதே இடத்தில் விடுவது தான் இதற்கான தீர்வாகும்" எனத் தெரிவித்தார்.

303 தெருநாய்களுக்கு தடுப்பூசி: முன்னதாக, ராயபுரம் மண்டலம், வார்டு 49, 50 மற்றும் 51க்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாம்கள் மூலம், தற்போது வரை 303 தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணியை நீக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, 121 வேலை நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 93 ஆயிரம் தெருநாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் - ரூ.296 கோடியில் ஒப்பந்தம்!

ABOUT THE AUTHOR

...view details