சென்னை மாநகராட்சி கல்வித் துறையானது ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இஸ்ட் மற்றும் பவுண்டேஷன் பார் அக்கேஷனல் ட்ரெய்னிங் உடன் இணைந்து விங்ஸ் டூ ஃபிளை (Wings to fly) திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி, வாழ்க்கைத் திறன் குறித்து பல்வேறு நிலைகளில் போட்டிகள், பயிற்சிகளை நடத்தி அதில் வெற்றிபெறும் மாணவ மாணவியரை வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுவந்துள்ளனர்.
இதில், 2016ஆம் ஆண்டு மலேசியாவிற்கும், 2017ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும், 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கும், 2019ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் சுற்றுலாச் சென்றுள்ளனர்.
இந்தாண்டு 70 சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு முதல் சுற்றாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றிபெற்ற மாணவ மாணவியர் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் வெற்றிபெற்ற 160 மாணவ மாணவியர் அரையிறுதிச் சுற்றுக்குச் தேர்வுசெய்யப்பட்டனர்.