சென்னை: தமிழ்நாட்டில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்குப் பருவமழை காரணமாக நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம், மழைநீர் புகும் வாய்ப்புள்ளது. இதனால் தேக்கமாகும் மழைநீரில் டெங்கு, மலேரியா நோய்ப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.
இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் திங்கள்கிழமை (செப். 20) முதல் வெள்ளிக்கிழமை (செப். 24) வரை, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதனிடையே சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் 695.31 கிமீ நீளமுள்ள, நான்காயிரத்து 254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், ஆறாயிரத்து 891 உடைந்த நிலையில் உள்ள மனித நுழைவு வாயில் மூடிகளை மாற்றம் செய்யத் திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகின்றன.