மார்ச் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மத போதக மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் தென்னிந்தியாவிலிருந்து கலந்துகொண்டவர்கள் 1500 பேர் என்றும், அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 131 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மாநாடு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் விமான நிலையங்கன், ரயில் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 515 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், 80 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 600 பேரை தமிழ்நாடு காவல்துறை உதவியுடன் தேடி வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையினர் மாவட்ட வாரியாக மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பிட்ட முகவரியில் சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால், நுண்ணறிவு பிரிவு மற்றும் கியூ பிரிவு காவலர்களை பயன்படுத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னையை பொறுத்தமட்டில் 75 பேர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.