இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் டாக்டர் மாணிக்கம், ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கரோனா வைரஸ் இன்றைய நிலையில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து விளக்கியுள்ளார்.
கேள்வி:இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் எந்த நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் அதனை கட்டுப்படுத்த ஐசிஎம்ஆர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன?
பதில்: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் நிறைய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்த பொழுது தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து எந்த பகுதியில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளார்களோ அங்கு சென்று அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதற்கான தொடர்பை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தினர். ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மூலம் நோய்த் தொற்று பரவியது. அதன் பின்னர் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் (ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற) நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன் பின்னர் குறிப்பாக சென்னையில் மார்க்கெட் மூலமாக நோய் பரவியது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக தொற்று பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றை குறைப்பதற்காக அரசு தொடர்ந்து பரிசோதனை செய்தல், நோயினைக் கட்டுப்படுத்துதல், நோயாளிகளை தனிமைப்படுத்துதல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்தியாவில் அதிகளவில் பரிசோதனை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
கேள்வி:கோயம்பேடு மார்க்கெட் மூலம் கரோனா வைரஸ் பரவியது என்பது உண்மையா?
பதில்: தமிழ்நாடு அரசின் புள்ளி விவரங்கள் அவ்வாறு தான் கூறியுள்ளன.
கேள்வி: தமிழ்நாட்டின் கரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா?
பதில்: நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் எந்த ஒரு தொடர்பையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே சமூக பரவல் என கூறமுடியும். தமிழ்நாட்டில் கண்டறியப்படும் ஒவ்வொரு கரோனா தொற்றுக்கும் ஏற்கனவே தொற்று ஏற்பட்ட ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் என அரசின் புள்ளி விவரம் தெரிவித்து வருகிறது. ஆரம்ப கால கட்டம்போல் தற்போதும் நோய் கண்டறியும் மற்றும் தனிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடு வீடாக சென்று சளி, இரும்பல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை இருக்கிறதா? எனவும் பரிசோதனை செய்து வருகின்றனர். அரசு வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, அவர்களை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி வருகின்றனர். சமூகத்தில் தொற்று எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மனித உடலில் இருந்து ரத்தம் எடுத்து அவர்களுக்கு தொற்று எப்போதாவது வந்துள்ளதா? என்பதற்கான அறிகுறி கண்டறிவதற்கான ஆய்வை தற்போது நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 69 மாவட்டங்களிலிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் கோவிட்-19 எந்த அளவு சமூகத்தில் இருக்கிறது என்பது தெரியவரும். இதுதான் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி முயற்சியாகும். மேலும் இந்த பரிசோதனை ஒருமுறை மட்டுமே செய்வது கிடையாது. மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும். ஒருமுறை ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே முடிவு செய்ய முடியாது. மீண்டும் செய்த பின்னரே ஆராய்ச்சியில் சமூகதில் தொற்றின் தாக்கம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை கூறமுடியும்.
கேள்வி: வீடுகளை தனிமைப்படுத்துவதற்கான பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளது சரியா?
பதில்:உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்தும் பகுதி அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக ஆராய்சிக் கூடங்களை அதிகரிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு பரிசோதனை மையங்களை தொடங்கியுள்ளது. இந்த பரிசோதனை மையங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்கின்றன.
கேள்வி:ஊரடங்கு நான்கு கட்டம் முடிவடைந்து ஐந்து கட்டமாக தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதனால் பயன் ஏற்பட்டுள்ளதா?
பதில்:ஊரடங்கினால் பயன் இருக்கிறது. அதற்குரிய ஆதாரத்தை நிதி ஆயோக் அமைப்பின் டாக்டர் விகே பால் அளித்துள்ளார். அதில் ஊரடங்குக்கு முன்னர் எவ்வளவு தூரம் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வந்தது. ஊரடங்கு இல்லாமலிருந்தால் அது மேலும் அதிகரித்திருக்கும். ஊரடங்கு மூலம் 14 லட்சம் முதல் 30 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்படுவதை தவிர்த்து இருக்கிறோம். ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காக அதிகரித்தது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இருமடங்காகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் வாய்ப்பை குறைத்து, தனிமனித இடைவெளியை அதிகரித்துள்ளோம். இதனால் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுவதை தவிர்த்துள்ளோம். மேலும் 70 ஆயிரம் உயிர் இழப்புகளையும் தவிர்த்துள்ளோம் என மத்திய மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தேசிய அளவில் ஆய்வு செய்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிலைமையைப் பொறுத்து, குறிப்பிட்ட முடிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பார்கள். மாவட்ட ஆட்சியர் அளவில் அதிகாரம் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தகுந்த இடைவெளியையும் முகக் கவசம் அணிவதையும் கை கழுவுவதையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: மதுரையில் மேலும் இருவருக்கு கரோனா!