சென்னையில் தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் கரோனாவிற்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட 8 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தண்டையார்பேட்டை மண்டலம் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்திலிருந்து இப்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. வடசென்னை பகுதியில் உள்ள கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவமனை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு 224 படுக்கை வசதி கொண்ட இந்த மையத்தில் 107 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இன்று எட்டு பேர் தொற்று பாதிப்பிலிருந்து சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டு பூரண குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.