ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டில் குடும்பத்தினருடன், பொழுதை கழித்து வருகின்றனர். சுமார் ஒரு மாதம் காலம், குடும்பத்தினருடன் வீட்டிலேயே இணைந்து இருப்பது, இனி வாழ்வில் என்றும் நிகழாத ஓன்று. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வீட்டிலேயே, பாதுகாப்பாக பயனுள்ள வகையில், நேரத்தை செலவிட வேண்டும் என்று கூறுகிறார் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பேராசிரிராக இருக்கும் மீனாட்சி.
இவரின் மகன் அஸ்வந்த் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பாடல் உருவான விதம் குறித்து அஸ்வந்த் கூறுகையில், எனக்கு பாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் கரோனா விழிப்புணர்வு பாடலை பாடவேண்டும் என்று நினைத்தேன். எல்லாரும் இப்போ கரோனா விழிப்புணவு பாடல் போடுறாங்க. ஆனா நான் வித்தியாசமாக பாட நினைத்தேன். அதனால் நான் டிவியில் பார்த்த விஷயங்களை வைத்து பாடல் எழுத நினைத்தேன்.
விழிப்புணர்வுப் பாடல் பாடிய அஸ்வந்த். கரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நிறைய பேர் வெளியில் வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவர்கள் சேவை, காவலர்களின் அர்ப்பணிப்பு, துப்புரவு பணியாளர்கள் பணி மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்து பாடவேண்டும் என்று நினைத்தேன். பாடலின் கரு நான் சொன்னேன் அதை பாடல் வரியாக்க எனது அம்மா உதவி செய்தார். இப்படித்தான் இந்த விழிப்புணர்வுப் பாடல் உருவானது.இந்த பாடல் கேட்ட மருத்துவர்கள் என்னை பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. என்றார்.
அஸ்வந்தை தொடர்ந்து அம்மா மீனாட்சி கூறுகையில், "இந்த ஊரடங்கு உத்தரவை மிகவும் பயனுள்ள வகையில் செலவழிக்கவேண்டும் என்று நினைத்தேன். நானும் எனது கணவரும் வேலைக்கு செல்பவர்கள் இதனால் குழந்தைகளோடு செலவழிக்கும் நேரம் மிகவும் குறைவு. அஸ்வந்த் இதுவரை முறையாக இசையை கற்கவில்லை.
ஆனால் அவனுக்கு இசைமீது ஆர்வம் அதிகம் என்பது எனக்கு இப்போது புரிந்துள்ளது. அஸ்வந்தின் கரோனோ விழிப்புணர்வு பாடல் குறித்து அனைவரும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர்கள் இந்த நீண்ட விடுமுறையை குழந்தைகளின் திறமையை அறிந்துகொள்ள பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.