தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகராட்சியில் அதிகரிக்கும் கரோனா - பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு - மாநகராட்சி

சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடிதம் மூலமாக மாநகராட்சி அனுப்பி உள்ளது.

மாநகராட்சியில் அதிகரிக்கும் கரோனா; பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு
மாநகராட்சியில் அதிகரிக்கும் கரோனா; பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

By

Published : Jul 6, 2022, 11:03 AM IST

சென்னைமாநகராட்சியில் கடந்த ஒரு சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பேருந்துகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற முதன்மை செயலாளர்/ சென்னை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் உரிமையாளர்களுக்கும், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் அவர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள்;

  • பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கடை உரிமையாளர்கள் தங்களுடைய கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • மேற்குறிப்பிட்ட இடங்களில் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
  • வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது இன்றியமையாதது ஆகிறது. எனவே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை கட்டாயம் முகக்கவசம் அணியவும், பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களும் முகக்கவசம் அணிவதை நடத்துநர் உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.

மேலும் பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதையும் சமுக இடைவெளியை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். செலுத்தாத நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பணிமனையின் மேலாளர் சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அனுகினால் பணிமனையிலே தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மீன் வாங்க அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதா? - மறுக்கும் ஆணையாளர்

ABOUT THE AUTHOR

...view details