சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில், நடமாடும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய வாகனங்களை பன்நோக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிப்பதற்கான இயந்திரங்களையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "மழைக்காலங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 65 நடமாடும் மருத்துவ குழுக்கள், அடுக்குமாடி கட்டடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் 21 புகை தெளிப்பு வாகனங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
குடிநீரில் குளோரினேசன் செய்வதை முழுமையாக கண்காணிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு குளோரினேசன் சரியாக கலக்காவிட்டால் மழைக்காலத்தில் வரக்கூடிய மலேரியா, காய்ச்சல் போன்றவை வரும் என்பதால் அதனை பரிசோதனை செய்ய 15 குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.