சென்னை மாவட்டத்தில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ராஜிவ் காந்தி மருத்துவமனையில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளது.
மத்திய அரசு நேற்று (மார்ச் 27) கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக வெளியிட்ட 46 மாவட்டங்களில் தமிழ்நாட்டில், இந்த 3 மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதுவரை, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரே நாளில் 2 விழுக்காட்டிற்கும் மேலாக பொதுமக்கள் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சென்னையிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்கள் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரே மருத்துவமனைக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிற மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறையினர் மீண்டும் இணைந்து கரோனா தடுப்புப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியமாகவும், முகக்கவசம் அணியாமலும் இருந்தால் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. நோய்க் கட்டுப்பாடு பணிகளைத் தீவிரப்படுத்த, அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் குடிசைப் பகுதியில் கரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி உள்ளது. கூட்டு குடியிருப்புப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.