தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வைரஸ்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்

சென்னை: கரோனா வைரஸ் காரணமாக ஏராளமான சலவை தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளதால் தங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

laundry workers
laundry workers

By

Published : Mar 29, 2020, 10:40 AM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் ஏராளமான தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. தொழிலாளர்களின் குடும்பங்களும் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் குறைந்தபட்சம் பசியின்றி உறங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, 15 கிலோ அரிசி உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது மட்டும் போதுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் சலவைத் தொழிலாளர்கள்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்

இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்காக தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் பேரவை மாநிலத் தலைவர் முத்துக்குமார், "கரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தல் வந்தபோதே கடந்த 20 ஆம் தேதியிலிருந்து தொழிலில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டோம். எங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது, எங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவக்கூடாது என்ற அடிப்படையில் நாங்கள் வேலையை நிறுத்தினோம்.

வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம்

தற்போது அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் நாங்கள் ஈட்டும் வருவாய்க்கு மேல் கூடுதலாக இந்தத் தொகை அறிவிக்கப்படும் போது அது மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆனால், தற்போது தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. நான்கு பேர் வசிக்கும் ஒரு குடும்பத்தில் குடிக்கும் தண்ணீருக்கே மாதம் 750 ரூபாய் தேவைப்படுகிறது. சலவைத் தொழிலாளிகள் அனைவரும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம். குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை செலுத்தவே குறைந்தபட்சம் நான்காயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.

30 லட்சம் பேர் சலவைத் தொழில் செய்றோம்

இது தவிர்த்து பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும். அரசு கொடுக்கும் 15 கிலோ அரிசி என்பது போதுமானதாக இல்லை. அரிசி, பருப்பு, காய்கறிகள், அத்தியாவசிய பொருள்கள் வாங்குவது என ஏராளமான செலவுகள் இருக்கிறது. கர்நாடகாவில் சலவைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆந்திராவில் 52 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 லட்சம் சலவை தொழிலாளர்கள் இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழில் செய்து வருகிறோம். இதனை மனதில் வைத்து எங்களுக்கு உதவிட வேண்டும்.

தமிழ்நாடு அரசிடம் எந்த பதிலும் இல்லை

தமிழ்நாடு அரசு எங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. போதிய அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததால் நாங்கள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறோம்" என மன வேதனையுடன் தெரிவித்தார்.

பிறர் வெளிச்சத்திற்காக இருட்டில் வாழும் சலவைத்தொழிலாளர்கள்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளுக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதைத் தாண்டி ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்றவர்களின் கெளரவத்தை காக்க அழுக்கை போக்கும் சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அரசு மறந்துவிடுகிறது.

பிறர் வெளிச்சத்திற்காக இருட்டில் வாழும் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சிறப்பு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க:கோவிட்-19: திகார் சிறையிலிருந்து 400 கைதிகள் விடுவிப்பு

ABOUT THE AUTHOR

...view details