இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் பரிசோதனையின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், கரோனா பாதிப்பு பொதுமக்களிடம் சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 53 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் 13 ஆயிரத்து 367 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 669 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 5 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 135 பேர் குணமடைந்து இன்று வீட்டுக்குத் திரும்பினர். இதுவரை, 1 ஆயிரத்து 959 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 74 வயது முதியவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 59 வயது முதியவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 55 வயது முதியவர் கரோனா தொற்றுடன் மேலும் சில நோய்கள் இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.