சட்டப்பேரவையின் இன்றைய நேரமில்லா நேரத்தில், கரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், “கரோனா பாதித்த மூன்று நபர்களின் தற்போதைய நிலை என்ன தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா ?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மற்ற மாநிலத்தை ஒப்பிடும் போது கரோனா சோதனை மையம் குறைவாக உள்ளது என்ற தகவல் உள்ளது. நம் மாநிலத்தில் மாவட்ட வாரியாக ஐசியூ அதிகரிக்கப்பட்டுள்ளதா ?. கரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?
உயர் நீதிமன்றத்தில் 40,000 PB kit வாங்கப்படும் என்று அரசாங்கம் சார்பில் தெரிவித்துள்ளீர்கள். அவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா?. 40,000 போதுமானதா? அதை அதிகப்படுத்த என்ன சங்கடம் உள்ளது? அதேபோல் கரோனா வைரஸ், மூச்சு திணறல் பாதிப்பு ஏற்படுத்துவதால் வென்ட்டிலேட்டர் தேவை உள்ளது. இந்நிலையில், நம்மிடம் உள்ள வெண்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கை வசதிகளை மேம்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்த அரசு? மாவட்டந்தோறும் வென்ட்டிலேட்டர் படுக்கையை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதலமைச்சர் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்க 60 கோடி ஒதுக்கியுள்ளார். ஆனால் என்னை பொறுத்தவரை இதற்காக 500 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”கரோனா அச்சத்தில் லேசாக காய்ச்சல், சளி இருந்தால் இதுவரை அரசு மருத்துவமனைக்கு வராதவர்கள் நேரடியாக தற்போது வந்து என்னை பரிசோதிக்க வேண்டும் என கேட்கின்றனர். பயணம் செய்திருந்தால், அறிகுறிகள் இருந்தால்தான் சோதனை செய்ய வேண்டிய தேவை உள்ளது. 1,00,000 லட்சம் மாஸ்க்குகளும், 10,00,000 டிரிபிள் லேயர் மாஸ்க்குகளும் கூடுதலாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
வென்ட்டிலேட்டர், மாஸ்க், தெர்மா ஸ்கேனர் தேவை உலகம் முழவதும் தேவை இருப்பதால் டிமாண்ட் இருப்பது உண்மைதான். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை தொடங்கி திருச்சி, சேலம், கோவை என எல்லா அரசு மருத்துவ கல்லூரிகளிலும் கரோனா சோதனை மையம் அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் வேலூர் சி.எம்.எஸ், அப்போலோ ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது முதலமைச்சர் 60 கோடி ரூபாய் நிதி ஒதிக்கியுள்ளார். தேவைப்பட்டால் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து எடுத்துக்கொள்வோம். பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் 16,000க்கும் மேற்பட்டோர் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அனுப்பப்படுகின்றனர். அதிக விலையில் மாஸ்க் போன்ற பொருட்கள் விற்கப்பட்டதால், இதுவரை 38 மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன”என்றார்.