கரோனா வைரஸ் (தீநுண்மி) தமிழ்நாடு முழுவதும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், திருவிக நகர் போன்ற இடங்களில் தொற்றின் பரவல் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்தப் பரவலைத் தடுக்க மாநில அரசு சென்னை, சில மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் நோய் பரவிவரும் பகுதிகளில் முகக் கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல், அதிக மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.
சென்னையில் முன்னதாகவே, தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது அந்த வரிசையில் அண்ணாநகரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்கிவருகிறது.
தினமும் அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீநுண்மி தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர் நேற்று மட்டும் 156 நபர்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 20ஆம் தேதி அண்ணா நகரில் மூன்றாயிரத்து 972 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி அண்ணாநகரில் நான்காயிரத்து 922 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாள்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா நகரில் இந்தப் பரவலை தடுக்க அதிக மருத்துவ முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று மட்டும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 62 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியின் மூலம் நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கபசுரக் குடிநீர் வழங்குவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் மாநகராட்சி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,
ராயபுரம் - 6,837 நபர்கள்
தண்டையார்பேட்டை - 5,531 நபர்கள்
தேனாம்பேட்டை - 5,316 நபர்கள்
கோடம்பாக்கம் - 4,908 நபர்கள்