தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமையை கடைபிடியுங்கள் கரோனா காணாமல் போகும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த 19 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைபிடியுங்கள் என அமைச்சர் உதயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்  - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

By

Published : Mar 27, 2020, 7:51 PM IST

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு 19 நாள்கள் பொது மக்கள் தனிமைப்படுத்துதலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்தியா உள்பட 198 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்த முடியாத ஒரு தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோய் பரவி வருவதையும், உலக சுகாதார நிறுவனம் இதனை ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளதையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது.

சுயதனிமையை கடைபிடியுங்கள்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை பற்றியும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஐந்து முறை நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாட்டில் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 3250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிவாரண உதவிகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் சமூக இடைவெளி, தனிமைப்படுத்திக்கொண்டு இருத்தலை கடைபிடித்தால் 100 சதவீதம் தொற்றை கட்டுப்படுத்த முடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பொது மக்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய அத்தியாவசிய சேவைகள், அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 560 கோடி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . சுய தனிமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது . மக்கள் தாமாக முன்வந்து சமூக இடைவேளியை கடைப்பிடித்தால் 100 சதவீதம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார அமைப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் , காவலர்கள் உயிரை பணயம் வைத்து உழைத்து வருகிறார்கள்.

நம்மை நாமே காப்பாற்றும் முயற்சி, தேசத்தை அடுத்த தலைமுறையினரை காப்பாற்றும் முயற்சி. இது நம் நாட்டிற்கு செய்யும் சேவையாகும். காய்கறி கடைகளை விசாலமான இடத்தில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார், அதையும் கடைப்பிடித்து வருகிறார்கள். இது மக்களாக முன் வந்து செய்யும் பணியாகும். மீதம் உள்ள நாள்களும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.

சில்லரை வணிகர்கள் மொத்த வணிகரிடம் இருந்து பொருட்களை எடுத்து வருவதற்கான அடையாள அட்டை வழங்கப்படும் அதனை காண்பித்து அவர்கள் பொருள்களை எடுத்து வரலாம். வெளி நாடுகளிலிருந்து வந்து, வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களது வீட்டின் சுவற்றில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் கைகளில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டில் தங்கியிருக்காமல் வெளியே செல்லும் பட்சத்தில், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதோடு, வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அமைந்திருக்கும் இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்க மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் உணவகங்களுக்கு வந்து உணவு வாங்கிச் செல்லும் வகையில் அதனை திறந்து வைக்க உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் சூடான உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அம்மா உணவகத்தை கிருமிநாசினிகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையங்கள் தடையின்றி இயங்கவும், பொது மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், கடைகளுக்கு வரும் மக்கள் வரிசையில் நிற்கவும், ஒவ்வொருவருக்கும் இடையில் மூன்றடி இடைவெளி விட்டு நிற்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான ஆம்புலன்ஸ் வாகனங்கள், பால், காய்கறி, குடிநீர், குடிமைப் பொருள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை தொடர்ந்து தடையின்றி இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதரவற்று சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான சமுதாய சமையலறைகள் அமைக்கப்பட்டு, உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாதிப்பிற்குள்ளாகியுள்ள பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் உள்ள வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மற்ற மாவட்டங்களில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையமும் கூடுதல் பணியாளர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களில் சுகாதாரத் துறையினைச் சார்ந்த அலுவலர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த அறிவுரைகள் வழங்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி பொது மக்கள் தங்களை இந்தக் கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசின் அறிவுரைகளை பின்பற்றுவதோடு, அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details