தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொத்துக்கொத்தாக வெளியேறும் வெளிமாநில தொழிலாளர்கள்: என்ன நடக்கிறது தலைநகரில்? - migrant workers crisis

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அமைதியாக இருந்தனர். ஆனால் இந்தியா சற்றும் எதிர்பாராத பிரச்னை ஒன்று தலைதூக்கியது. அதுதான் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னை.

டெல்லி
டெல்லி

By

Published : Mar 28, 2020, 11:24 PM IST

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தவிர மற்ற நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் தமிழ்நாட்டில் இயங்கிய சிறு நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலானோர் தங்களது நிறுவனத்தில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கினர். இவர்களில் சிலர் குடும்பத்துடன் இங்கு தங்கியுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பணியாற்றிய வடமாநில கூலித் தொழிலாளிகள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டனர்.

இவற்றில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

நோய் பரவலைத் தடுக்க ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுதான் பிரச்னையின் தொடக்கப்புள்ளி. பெரும்பாலான இடம் பெயர்ந்து வாழும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது போக்குவரத்துக்கு ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ரயில் போக்குவரத்தே அவர்களின் சக்திக்கு சாத்தியமாக இருக்கிறது.

தொழிலாளர்கள் தவிர்த்து மாணவர்கள், சிகிச்சைக்காக தமிழகம் வந்தவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர். இவர்கள் கையில் போதிய பணம் இல்லாத காரணத்தினாலும், தமிழ் தெரியாத காரணத்தினாலும் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி கடுமையான சிரமங்களுக்கு ஆளாகினர்.

நாடு முழுவதும் இதே போன்ற நிலைதான். இவர்களில் சிலர்தான் மூட்டை முடிச்சுகளுடன் எத்தனை மைல் தூரம் என்றாலும் வெறுங்காலுடன் நடந்து கடந்துவிடலாம் என்று பயணத்தை தொடங்கியவர்கள்.

இது நீண்ட நெடிய பயணமாக இருக்கலாம், ஆபத்தான பயணமாக இருக்கலாம், வழியில் உணவு கிடைக்காமல் போகலாம் என தெரிந்தும் வேறு வழியின்றி புறப்பட்டனர். நாடு முழுவதும் இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் வசித்த கூலித்தொழிலாளர்கள் வெகு தூரம் நடக்க தொடங்கிய அதே நேரத்தில் தமிழகத்தில் பிரச்சனை வேறு விதமாக இருந்தது. உணவு, மருத்துவ வசதிகளை கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற பிரச்னை நிலவுகிறது.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய சிஐடியு பொதுச்செயலாளர் சுகுமார், இதுபோன்ற தொழிலாளர்கள் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்று அதிர வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களிடம் கையில் போதிய பணம் இல்லை. அதைபோல் வடமாநிலத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவுவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் உலா வருகிறது. இதனால் இங்கு தங்கி பணிபுரியும் தொழிலாளர்களை வடமாநில ஊழியர்களை வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக காலி செய்துள்ளனர்.

இதனால் அதிகளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டனர். அதேபோல திருப்பூர் கோவை ஈரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், இன்ஜினியரிங் நிறுவனங்கள், உணவகங்கள் தங்களது தொழிலாளர்களை பற்றி கவலை கொள்ளாமல் அவர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர். இதனால் அவர்கள் உணவின்றி தவித்துள்ளனர்" என்றார்.

இதுபோன்று இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்காக தமிழக அரசு சில திட்டங்களை அறிவித்தது. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு தங்க முகாம்கள், அவர்களுக்கு உணவுகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் எத்தனை இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இடம் பெயர்ந்து வாழும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இதுபோன்ற சிறப்பு திட்டங்களை அறிவித்தும் ஏன் இவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற கேள்வியை அவரிடம் கேட்டோம்.

"முதலில் அரசு அறிவித்த திட்டங்கள் இவர்களை சென்று சேரவில்லை. இரண்டாவதாக இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் தொடர்பாக தமிழக அரசிடம் எந்த தகவல்களும் இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

கேரளா போன்ற மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் முறையாக சேமிக்கப்படுகிறது. இதனால் அவர்களை எளிமையாக கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடிகிறது.

தற்பொழுது புகார்களின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர்களுக்கு சமூக தொடர்பு இல்லாமல் இருப்பது மற்றொரு பிரச்சினையாக இருக்கிறது. வேலை செய்வது ஓய்வெடுப்பது என்பது மட்டுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.

தற்போது இவர்களில் சிலர் தங்கள் சொந்த ஊர்களில் உள்ள உறவினர்களிடம் தகவல் தெரிவித்து அவர்கள் மூலமாக அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மூலமாகவே நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், தாசில்தாரிடம் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க முயற்சி செய்து வருகிறோம்.

இதுபோன்ற தகவல் வந்து சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகிறது. இதனால் பலர் நான்கு முதல் ஐந்து நாள்கள் உணவில்லாமல் தவிக்கிறார்கள்.

அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி இவர்களுக்குத் தேவையான உணவு இருப்பிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இது சமூக பிரச்சினையாக உருவாகும்" என்று எச்சரித்தார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் உடனடியாக விமானம் மூலமாக மீட்கப்பட்டனர், ஆனால் உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களை பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை என ஒரு சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் இது தவறான பார்வை.

ஒட்டுமொத்தமாக லாக்- அவுட் என்று சொல்லப்படக்கூடிய முடக்கம் அறிவிக்கப்பட்டதன் நோக்கமே நோய்க்கிருமி அனைத்து பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதேயாகும்.

டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஏற்படும் பாதிப்பு பீகார் உத்திரபிரதேசம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு கிராமங்களில் ஏற்பட்டால் அவை வெளிச்சத்துக்கு வரவே பல நாட்கள் ஆகும். பின்பு அவற்றுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகளும் அங்கு இருக்காது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் மக்கள் அங்குமிங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் இருந்தால் கரோனா வைரஸ் தாக்குதல் எந்த இடத்தில் பரவுகிறது என்பதை கண்டறிந்து அதனை தடுக்க முடியும்.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது. தற்பொழுது இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களை அரசு முகாம்களில் தங்க வைக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும் தற்போது இது மிக முக்கியமான நடவடிக்கை. எனினும் இது தற்காலிக தீர்வே.

நாடு முழுவதும் இடம்பெயர்ந்து வாழும் கூலித் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து ஒரு தகவல் தொகுப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை கிராமத்திலிருந்து நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தொழிலாளர்கள் இடம்பெயர்வது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சி ஏற்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் சிறந்தது.

ABOUT THE AUTHOR

...view details