சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக அதிகரித்துவருகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. தனிமைப்படுத்தும் மையங்களில் படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து ஏற்படுத்திவருகின்றன.
கரோனா தாக்கம் முதல் அலையின்போது பாதிப்புகளின் வீரியத்தைக் குறைப்பதற்காக இந்திய மருத்துவம், ஒமியோபதித் துறையின் மூலம் சித்த வைத்தியத்தில் கபசுரக் குடிநீர் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டன.
இதனால், நோயினால் பாதிக்கப்பட்டவர் இறப்பு எண்ணிக்கை குறைய பயனாக இருந்தது. மேலும், கரோனா தொற்று தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்காக நோய் எதிர்ப்புச் சக்தியை அளிப்பதற்கான மருந்தும் தயாரித்து வழங்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா தொற்று 2ஆவது அலை தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் மீண்டும் சித்த மருத்துவர்கள் நியமனம்செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பவுடர் ஆகியவை தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறையின் இயக்குநர் கணேஷ் கூறும்போது, “கரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது. முதல் அலையில் சித்த மருத்துவம், மருத்துவர்களைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தோம்.
அதேபோல் மீண்டும் இரண்டாவது அலையில் சிகிச்சையளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கபசுரக் குடிநீர், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் குடிநீர் ஆகியவையும் தயார்செய்யப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது” எனக் கூறினார்.