கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் இன்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த தடைக்காலத்தில் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக நான்கு முறை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று நகர்ப்புறம், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை, முன்னேற்பாடுகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேசுகையில், “கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தலைமை அலுவலகங்களிலும் கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு கவசம், வழங்கபட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த குறும்படங்கள் பரவலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
உள்ளாட்சித் துறை அமைப்புகளில் 90 ஆயிரத்து 23 களப்பணியாளர்கள், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 135 தூய்மை பணியாளர்கள், 708 கண்காணிப்பு அலுவலர்கள், 11 ஆயிரத்து 834 கைத்தெளிப்பான்கள் கொண்டு சென்னை மாநகராட்சியில் 70 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.