இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்புத் தகவலில், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 25 நாடுகளில் உள்ளது என அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல், தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் தெர்மல் சோதனை செய்யப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 22 விமான நிலையங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் தற்போது (12ஆம் தேதி) வரை 32 ஆயிரத்து 993 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2003 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் என ஒரு பயணி, தனி வார்டில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.