கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ஏ.பி. சாஹியைச் சந்தித்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முறையிட்டனர்.
இது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர் முஸ்தஹீன் ராஜா, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளித்திருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தனது நீதிமன்ற அறைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, நீதிமன்ற அறைக்கு வெளியில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.