கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளிலுள்ள 2,500 வீடுகளைக் கொண்ட பகுதியை மாநகராட்சி ஊழியர்கள் தினமும் கண்காணித்து வருவதோடு, ஆய்வு நடத்தியும் வருகின்றனர். அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கிறதா என்ற விவரங்களைச் சேகரித்துவருகின்றனர்.
இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் பிரம்மாண்ட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் கண்காணிக்க ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழு பெண்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் இணைந்து, சென்னை மாநகரில் உள்ள தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள் உள்பட மாநகரில் உள்ள 10 லட்சம் இடங்களில், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
ஆய்வின்போது, ஒரு பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் இருந்தால் கண்டறிய முடியும்" என தெரிவித்தார்.
கரோனாவைத் தடுக்கும் டிராக்கர் செயலி அறிமுகம்:
இப்பணிகளை ஒருங்கிணைப்பதோடு, எளிதாக மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் "கரோனா டிராக்கர்" செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியைச் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ள இணைப்பு (லிங்க்) மூலம் மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.