சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வை அறிய தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அதன் இயக்குநர் செல்வ விநாயகம் தலைமையில் கடந்த மாதம் (ஜூலையில்) ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநர்களால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
சென்னையில் சென்னை மாநகராட்சி ஆதரவுடன், சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தினர். தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் ஒரு நபரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டது. அதில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்தும், தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களின் மனநிலை குறித்தும் கேட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆய்வு முடிவு
இதில் 80.3% ஆண்களும், 81.6% பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும், 19.7% ஆண்களும், 18.4% பெண்களும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. நகர்புறத்தில் 82.5% பேரும், கிராமபுறங்களில் 79.7% பேரும் தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.