கரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும் தனியார் மருத்துமனைகள் அரசுடன் இணைந்து கரோனா சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் சிகிச்சை காரணமாக அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வண்ணம் அரசாணை எண். 240, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாள் 5.6.2020இன் மூலம் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வழங்கியுள்ளது. அதைத் தொடர்து கரோனா தொற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளும், அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வு துறையினரால் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பீவெல் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறையினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000/- வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.
இதையடுத்து அரசின் அனுமதியானது தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டது. மேலும் கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறையால் ஏற்கனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்துள்ளனர். எனவே இதுகுறித்து புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிதம்பரம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கரோனா நோயாளிகள்!