கரோனா தொற்று குறித்த அச்சம் எழுந்த பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் கோழி இறைச்சி விற்பனை 50 விழுக்காடு குறைந்துள்ளது. கோழி இறைச்சி சாப்பிடுவதால் கரோனா பரவாது என்று பல்வேறு தரப்பிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை இது தொடர்பாக தெளிவுப்படுத்தும்விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்களின் உற்பத்தி, நகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன் இறைச்சி, கால்நடைத் தீவனம், கால்நடைத் தீவன உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை முதன்மைச் செயலர் - கால்நடை, கோழி, மீன், முட்டை, இறைச்சி, கோழி தீவனம், கால்நடைத் தீவனம், உற்பத்திக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவுப் பொருள்கள் சாப்பிடுவதால் நோய் தொற்று பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டுவருகிறது. இதனால், பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாகத் தெரியவருகிறது. இது முற்றிலும் தவறான வழிநடத்தும் செய்தியாகும்.