சென்னை:சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(அக்.21) தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா உள்ளிட்ட தொற்று நோய்க்கு கவனம் செலுத்தி வரும் நேரத்தில், தூய்மை பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தொற்றா நோய் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் 100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனையை எட்டி உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 5.4 கோடியாக உள்ளது. வரும் நாட்களில் அதிகம் பங்களிப்பு வழங்க வேண்டும்.
53.8 லட்சம் தடுப்பூசி கையிருப்பு
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த 57 லட்சம் பேர் தகுதி பெற்ற உள்ள நிலையில், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 21 விழுக்காடு நபர்கள் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஒன்றிய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பப்படுகிறது.