தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர், டிஜிபி, சுகாதாரத் துறை, உள்துறை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் முதன்மைச் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
- சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளை வருகையை மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின்
- வழிமுறைகளின்படி, 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கத் தேவையான வசதிகளை இயன்றவரை விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.
- அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநரும், பொது சுகாரதாரத் துறை இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனைச் சாவடிகளில், நோய்க் கண்காணிப்புப் பணிகள், தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- அண்டை மாநில எல்லையையொட்டி உள்ள சுங்கச் சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.
- பேருந்துகளையும் மெட்ரோ ரயில்களையும் தினமும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்ய தென்னக ரயில்வே மேலாளருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரத் துறையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
- ஒருங்கிணைந்த குளிர்சாதனை வசதி உள்ள இடங்களில் அவற்றை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
- தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளைப் பார்வையிட வருவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
- மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அரசுத் தேர்வுகள் (10 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் - செய்முறைத் தேர்வுகள் உள்பட), நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள், உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.
- மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாள்களுக்கான உணவுப் பொருள்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.
- மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூட வேண்டும்.
- ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்தளவில்தான் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31ஆம் தேதி வரை நடைபெறுவதை திருமண மண்டப உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
- திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்தளவில் மக்கள் கூடினால், கரோனா வைரஸ் அதிகமாகப் பரவும் என்பதால் பொதுமக்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- அதிகமாகக் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த மார்ச் 31ஆம் தேதி வரை அனுமதி வழங்கக் கூடாது.
- அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உள்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.
- மேற்கூறியவற்றைத் தவிர பிற அவசிய மற்றும் அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும்.
- மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை அனைத்து அரசுத் துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
- அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- இதற்குத் தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றைப் போதியளவில் இருப்பில் வைத்து பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
- அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் கரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாகக் கருதி, வெளியில் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக் கூடாது. சுற்றுலாப் பயணியர் தங்குமிடம் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். சுற்றுலாப் பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் மார்ச் 31ஆம் தேதி வரை செய்யக் கூடாது.
- கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பிறவழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இடங்களில் நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தெர்மல் ஸ்கேனர் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை, சுகாதாரத் துறை, மசூதிகள், தேவாலயங்களின் நிர்வாகங்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- யாரேனும் கரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால்,கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்குத் தவிர்க்கவும்.
- கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணங்கள், இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறும், தனி மனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
- அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவும், கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொடவேண்டாம்.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாள்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவும்.
- அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைப்படுத்திக் கொண்ட பின் செல்ல வேண்டும்.
- சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும். கரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்துகொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.
- மேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் நடைமுறைக்கு வரும்.