சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி பரிசோதனை செய்வதை பார்வையிட்டு, மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மார்ச் மாதம் முதல் அரசு எடுத்து வருகிறது. வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மாநகராட்சி முழுவதும் 500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் காய்ச்சல், சளி ஆகியவை கண்டறியப்பட்டுவருகிறது. இந்த மருத்துவ முகாமகள் மூலம் இதுவரை 7 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.
குறிப்பாக நேற்று முன்தினம் வரை(ஜூன் 30), மூன்று லட்சத்து 65 ஆயிரத்து 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்தத் தனிமைப்படுத்துதல் மூலமாக நோய் தொற்று பரவுதல் குறைக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக ஆயிரம் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னையில், நேற்று ஒருநாள் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் தினந்தோறும் பரிசோதனை செய்யப்படுபவர்களின் என்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிகளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அளிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் கூறியதன் அடிப்படையில், இலவசமாக முகக்கவசம் வழங்கும் பணி 95 விழுக்காடு நிறைவுற்றுள்ளன.
பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் குறைவு ஆகியவற்றில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.