உலகம் முழுவதும் 184 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 1,152 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் மூலம் தெரியவருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை இன்று (02.05.2020) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 174 பேருக்கும், அரியலூரில் 18 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகியவை அதிக பாதிப்புகளைக் கொண்ட 12 மாவட்டங்கள் "ரெட் அலார்ட்" மாவட்டங்களாகவும், 15 பேருக்கும் குறைவான பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களை ஆரஞ்சு நிறத்திலும், ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை நிறத்திலும் வகைபடுத்தப்பட்டுள்ளது.