இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தாக்கம் வேகமாகப் பரவிவருகிறது. அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில், கரோனா ஒருங்கிணைந்த கட்டளை மையம் (UCC) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 104 சுகாதார சேவை மையங்களுடன் இணைந்து, அரசு, தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளுக்குப் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம் அல்லது 104 GoTN (@104_GoTN) என்ற ட்விட்டர் கணக்கில் விவரங்களை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்ட்டிலேட்டர்கள் எண்ணிக்கை, தற்பொழுது https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரம் பெறலாம்.
சென்னையில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் வென்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் போதுமானதாக இல்லை.
தினசரி கரோனா பாதிப்பு என்பது தமிழ்நாட்டில் 21 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 6,000 கடந்து பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் நோக்கி செல்கின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் நேற்று (மே.3) முதல் 32,785 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டில் 9,257 நபர்களும், காஞ்சிபுரத்தில் 3,026 நபர்களும், திருவள்ளுரில் 5,973 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள 225 சாதாரணப் படுக்கைகளில் 10 மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுள்ள 198 படுக்கைகளில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. 102 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 525 படுக்கைகளில் 10 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 250 சாதாரணப் படுக்கைகளில் 25 மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுள்ள 108 படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. 92 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 450 படுக்கைகளில் வெறும் 25 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 576 சாதாரணப் படுக்கையில் 399 மட்டுமே காலியாக உள்ளன. 657ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கையில் 4 மட்டுமே காலியாக உள்ளன. 385 ஐசியு படுக்கைகளில் எதுவுமே காலியாக இல்லை. மொத்தமாக இருக்கக்கூடிய 1,618 படுக்கைகளில் 403 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.