உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த, இந்திய ரயில்வே துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென்னக ரயில்வே துறை மூலம் இயக்கப்படும் ரயில்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ரயில்களுக்கு உள்புறமும், வெளிப்புறமும் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ரயில்களின் அனைத்து பெட்டிகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என அனைத்து அலுவலர்கள், ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என கேட்பொலி (ஆடியோ), காணொலிகள் மூலம் அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து ரயில்களிலும் உள்ள குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, மெத்தை விரிப்பான்கள், ஜன்னல் திரை சீலைகள் (woolen blankets) ஆகியவை பயணிகளுக்கு வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.