கரோனோ நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்தார். அவருடன் தலைமைச் செயலர் சண்முகம், காவல் துறைத் தலைவர் திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் சண்முகம், "கரோனா தொற்றினைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். இதற்கு ஆளுநர் பாராட்டுகளைத் தெரிவித்தார். தற்போது ஒரு கோடியே 50 லட்சம் முகக்கவசங்கள் வாங்கவும், 2,500 வென்ட்டிலேட்டர் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று அதிகரிக்கும்போது, தேவைப்படும் அளவிற்கு படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கரோனா தொற்று கண்டறிய ஆய்வகங்கள் 17 உள்ள நிலையில், கூடுதலாக 6 ஆய்வகங்கள் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் முகக்கவசங்களைத் தயார் செய்துவருகின்றனர்.
திருப்பூரில் முகக்கவசம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. டெல்லியில் ஜந்தர்மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியவர்களுக்குத்தான் நோய் தொற்று அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதியிலிருந்து 8 கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.