சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்திலுள்ள அரசு கரோனா மருத்துவமனையில், முழு கவச உடை அணிந்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரித்து, வழங்கப்படும் சிகிச்சை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.
கிண்டி கிங் இன்ஸ்டியூட் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில், மகாராஷ்டிரா போன்ற 10 நகரங்களில், கரோனா தொற்று அதிகம் உள்ளது. ஆனால் அந்தப் பட்டியலில் சென்னை இல்லை. ஆனாலும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் 3 விழுக்காடாக இருந்த தொற்று தற்பொழுது 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனையில் 1,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 4,368 படுக்கைகளும், தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. 70 ஆயிரம் படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்களும் தயார் நிலையில் உள்ளன.
மருத்துவ பணியாளர்கள் போர் வீரர்கள் போன்று உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர். இதனை மக்கள் கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொற்று கூடுதலாக பதிவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் 600 இடங்களுக்கு மேல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாறியுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் முக கவசம் அணிய வேண்டும். தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. இதனை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 10,40,000 கோவிஷீல்டு தடுப்பூசியும், 2 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளும் ஏப்ரல் 2ம் தேதி வர உள்ளது. தனியார் மருத்துமனைகளில் தடுப்பூசியை அதிக விலைக்கு போடுவது குறித்து புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
80 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும், 20 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும் 18 வயதுக்குட்பட்ட கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விகிதம் 8 சதவீதமாகவும், 18 வயது முதல் 45 வயதுடைய நபர்களுக்கு 50 சதவீதத்திற்கும் மேல் உறுதியாகியுள்ளது. இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சி கூட்டங்களில், அரசியல் தலைவர்கள் மக்களை முக கவசம் அணிந்து வர சொல்ல அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்குமா?