தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக ஆயிரத்தை எட்டி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்தச் சூழலில் சுகாதாரத்துறைச் செயலாளராக பணியாற்றிய பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு, பேரிடர் காலங்களிலும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையிலும் அனுபவம் வாய்ந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இன்று (ஜூன் 12) ஒரே நாளில் பரிசோதனை செய்யப்பட்ட 16 ஆயிரத்து 889 மாதிரிகளில், ஆயிரத்து 982 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 18 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 18 ஆயிரத்து 281 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதபோன்று, இன்று ஒரே நாளில் 342 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 47ஆக உயர்ந்துள்ளது.