உதவி பெண் பொறியாளருக்கு கரோனா தொற்று - சக ஊழியர்கள் பீதி! - பெண் உதவி பொறியாளர்
சென்னை: அம்பத்தூரில் உதவி பெண் பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சக ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
![உதவி பெண் பொறியாளருக்கு கரோனா தொற்று - சக ஊழியர்கள் பீதி! அம்பத்தூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:09-tn-che-01b-ambattur-zone-office-engineer-lady-corona-attack-vis-script-tn10021-10062020120513-1006f-1591770913-491.jpg)
அம்பத்தூர் மண்டலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக அம்பத்தூர், தொழிற்பேட்டை, கொரட்டூர், பாடி, ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம், அண்ணாநகர் மேற்கு விரிவு ஆகிய பகுதிகளில் நேற்று ( ஜூன் 9) வரை 841பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 452 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும், 389 பேர் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது மட்டுமல்லாமல், இதுவரை வைரஸ் தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அம்பத்தூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் பெண் உதவி பொறியாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர், அம்பத்தூரை அடுத்த பாடி, சீனிவாசன் நகரில் வசித்து வருகிறார். அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா தடுப்பு பணிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்தார். இந்த சோதனைக்கான முடிவு இன்று (ஜூன் 10) காலை வந்தது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை சுகாதாரத்துறை அலுவலர்கள் மீட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், அவரது பெற்றோரையும் தனிமைப்படுத்திள்ளனர். அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் கிருமி நாசினி உள்ளிட்ட தடுப்பு பணிகளை செய்து வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் உதவி பொறியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது சக ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்திள்ளது.