தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தற்பொழுதுள்ள நிலைப் பற்றியும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் ராமகிருஷ்ணன், வேலூர் மருத்துவக்கல்லூரி இயக்குநர் பீட்டர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பிரகதீப் கவுர், உலக சுகாதார நிறுவனத்தின் மண்டலத் தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், சில ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கியுள்ளனர்.
அதாவது, தற்போது மக்களிடையே கோவிட் தொய்வு காணப்படுகிறது என்றும் இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் முற்றிலும் குறைந்துள்ளது. இதுவே கோவிட் மீண்டும் அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணமாகும். கோவிட் தொற்று ஏற்படும்போது அவர்கள் வசிக்கும் இடத்திலோ இல்லையெனில் பணி செய்யும் இடத்திலோ கூட்டுத் தொற்று ஏற்பட வழிவகை செய்கிறது.