உலகம் முழுவதும் கரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவிவரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அனைவரும் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், இதற்கு மாற்றாக தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக மாநில அவசர கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவத்துறை இணை இயக்குனர்கள் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, ”கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரோனா தொற்று சிகிச்சை பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை விதிமுறையின்படி கட்டாயம் தனிமைப்படுத்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் உள்ளவர்களுக்கு சமூகப் பரவல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தினமும் வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.