சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவந்த நிலையில், சில மண்டலங்களில் மட்டும் அதன் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அவற்றை குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், அண்ணா நகர் மண்டலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் 97ஆக அதிகரித்துள்ளதாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்கள் ஒரு விழுக்காடாக உள்ளனர். அதுபோல கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 575 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள இரண்டாயிரத்து 198 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நான்காயிரத்து 44 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில்,
அண்ணா நகர் - 25,024
கோடம்பாக்கம் - 24,602
தேனாம்பேட்டை - 21,791
ராயபுரம் - 19,892
அடையாறு - 18465
திரு.வி.க. நகர் -18,104