தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்தவர்களின் விவரம் விரைவில் வெளியீடு'

சென்னை: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிடும் பணி நடைபெற்றுவருவதாகத் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Corona CM relief fund,
Corona CM relief fund,

By

Published : Jun 26, 2020, 7:20 PM IST

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிசெய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.

தற்போது கரோனா பரவலைத் தடுக்கவும், ஊரடங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள், தனிநபர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் அவர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். ஆனால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு, என்பன போன்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ”முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல் 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே முழு விவரங்களையும் அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்த்து. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் நிதித்துறை துணைச் செயலரும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளாசெல்வி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் தங்களால் முயன்ற உதவியைச் செய்தனர். அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தின் வாயிலாக பணம் செலுத்தியவர்கள் விவரங்கள் அதில் இடம்பெறவுள்ளன. அதேசமயம் அரசின் சேமிப்பு வங்கி கணக்கிற்கு வரைவோலை, காசோலை மூலமாகவும், சிலர் இணைய வழியாகவும் (கூகுள் பே, போன் பே) நிதி அனுப்பியுள்ளனர்.

இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும், அனைத்தையும் தொகுத்து இணையதளத்தில் வெளிப்படைத்தன்மையுடன் முழு விவரங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 10 லட்ச ரூபாய்க்கு மேலாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் பத்திரிகைச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் தொகை யாவும், மாநிலப் பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட, அதனை பிரத்யேகமாக முழு கவச உடைகள், வென்டிலேட்டர், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு உணவுப் பொருள் வழக்கல், பொதுச் சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டுவருவகிறது.

அரசு அலுவலகங்களில் குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிக்கு வருவதாலேயே இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details